Friday, January 02, 2009

499. உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன் - TPV18

திருப்பாவை பதினெட்டாம் பாடல்

நந்தகோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை துயில் எழுப்புதல்

ஸாவேரி ராகம், ஆதி தாளம்

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார்விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


மதம் கொண்ட யானையின் நடையை உடையவரும், போரில் பகைவரைக் கண்டு பின்வாங்காத தோள் வலிமை மிக்கவருமான நந்தகோபருடைய மருமகளே! மணம் வீசும் கூந்தல் கொண்ட நப்பின்னை பிராட்டியே! நீயாகிலும் வந்து கதவைத் திற! எழுந்து வந்து கோழிகள் கூவுவதைக் கேள்!

குருக்கத்தி கொடி படர்ந்த பந்தல் மேலமர்ந்து, பலவகையான குயில்கள் சத்தமிடுவதைக் கேள்! மலர்ப் பந்தைப் பற்றியிருக்கும் மென்மையான விரல்களையுடையவளே! உன் கணவன் கண்ணனுடைய திருநாமங்களைப் போற்றிப் பாட வந்துள்ளோம். ஆகையால், தாமரை மலரை ஒத்த உன் சிவந்த, மென்மையான கையில் அணிந்த கைவளையல்கள் சீராக ஒலிக்க, உள்ளக் களிப்புடன் வந்து கதவைத் திறப்பாயாக!

பாசுரச் சிறப்பு:

முந்தைய பாசுரத்தில், நந்தகோபர், யசோதை, பலராமன், கண்ணன் ஆகியோரை எழுப்பிய பின், இப்பாசுரத்தில் கண்ணன் மேல் மிகுந்த உரிமையுடைய, அவனது முதல் மனைவியான, நப்பின்னை பிராட்டியை கோபியர் துயிலெழுப்புகின்றனர். வைணவ வழிபாட்டு முறையில், முதலில் ஆச்சார்யனையும் (குரு), தேவர்களுக்கும் மேலான அனநாதரையும், கருடாழ்வாரையும், வைகுண்டத்துத் தளபதியான விஸ்வக்சேனரையும் வாழ்த்திப்பாடி விட்டு, பிராட்டியார் வாழ்த்து பாடுவர். கண்ணன் அருளைப் பெறுவதற்கு பிராட்டியின் பரிந்துரை அவசியமானது என்பது இதன் உட்பொருளாம்.

நப்பின்னை பிராட்டியை "நந்தகோபாலன் மருமகளே!" என்று ஆண்டாள் (மாமனார் சம்பந்தத்தை சொல்லி!) பாடியதற்கும் ஒரு அழகான விளக்கம் இருக்கிறது. நப்பின்னை பிறந்த வீட்டைக் காட்டிலும், தனது புகுந்த வீட்டிலேயே மிக்க மகிழ்ச்சியாக இருந்தாள் என்பதை உணர்த்துவதாக இதைக் கொள்ளலாம்! அது போல, நந்தகோபரின் (உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்) ஒப்பிட முடியாத வலிமையைப் போற்றி விட்டு, அப்பேர்பட்ட நந்தகோபரின் மருமகளாக நப்பின்னையை கோபியர் விளிக்கும்போது, நப்பின்னை பிராட்டி மனம் குளிர்ந்து போவாள் தானே :) அதன் வாயிலாக, கண்ணனை எளிதில் அடைய முடியும் என்பது கோபியரின் நம்பிக்கை!


பந்தார் விரலி என்று பாடும்போது, கண்ணனோடு பூப்பந்து விளையாடி அதில் அவனை தோற்கடித்து விட்டு, கண்ணனை ஒரு கையாலும், பூப்பந்தை ஒரு கையாலும் அணைத்த வண்ணம் கிடந்த நப்பின்னையின் கோலம் சித்தரிக்கப்படுகிறது!

ஐம்புலன்களில் "தொடுதல்" என்பது மேலே சொல்லப்பட்டது. அது போல, மற்ற நான்கு புலன்களின் அனுபவமும் சொல்லப்பட்டுள்ளது சிறப்பு!

கந்தம் கமழும் குழலி - மூக்கு
உன் மைத்துனன் பேர் பாட - நாக்கு
சீரார் வளையொலிப்ப - செவி
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ - கண்


வைணவத்தின் முக்கிய சித்தாந்தமான, திருமாலும், திருமகளும் பிரிக்க முடியாதவர் (ஒன்றே) என்பதையும், அவர்கள் இருவரும் சேர்ந்தே உபாயமாகவும் (வழிமுறை) உபேயமாகவும் (குறிக்கோள்) இருப்பதையும் இப்பாசுரம் உணர்த்துகிறது. இதை வடமொழியில், "ஏக சேஷித்வம்" என்றுரைப்பார்கள்.

வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! - இங்கே கோழி என்பது வைணவனுக்குரிய (திருமாலின் தொண்டன்) ஒரு முக்கிய குணநலத்தைக் குறிப்பில் உணர்த்துகிறது. வைணவர்கள் நாரை போல, கோழி போல, உப்பைப் போல, ஊமையைப் போல இருத்தல் வேண்டும் என்று பெரியோர் கூறுவர்.

'நாரையைப் போன்றவன்' என்பதற்கு, உண்மையான ஞானத்தைக் கொண்ட ஆச்சார்யனை சரணடைய காத்திருப்பவன் என்றும், 'கோழியைப் போன்றவன்' என்பதற்கு, வேதங்களின் சாரமான திருவாய்மொழியை நான்கு வேதங்களிலிருந்தும் சிறந்ததாக பிரித்தெடுக்க வல்ல திறமை மிக்கவன் என்றும், 'உப்பைப் போன்றவன்' என்பதற்கு, பகவத்(இறை), பாகவத(அடியவர்), ஆச்சார்ய(குரு) சேவைகளில் கரைபவன் என்றும், 'ஊமையைப் போன்றவன்' என்பதற்கு, அகந்தையும், ஆணவமும்
இல்லாதிருப்பவன் என்றும் வைணவப் பெருந்தகைகள் உள்ளுரை கூறுவர்.

பொதுவாக, கோழி (சேவல்) விடியலில் மூன்று முறை கூவும். அது

1. தினமும் மூன்று வேளையும் பரமனை வழிபட வேண்டும்
2. திருமந்திரம், த்வயம், சரமசுலோகம் ஆகியவற்றை தினம் உரைக்க வேண்டும்
3. பரத்துவம், வைணவத்துவம், சரணாகதித்துவம் என்ற மூன்றின் அவசியத்தை உணர வேண்டும்

என்ற மூன்று விஷயங்களை குறிப்பில் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன் - சரணாகதித்துவத்துக்கும், அதன் பயனாக மோட்ச சித்திக்கும் வேண்டிய தன்மை உடையவன்

நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்! - திருமகளைக் குறிக்கிறது

கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய் - பரமனைப் பற்றுவதற்கு தடையாக இருப்பவற்றை நீக்க வேண்டுமிறோம்.

வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! - சுற்றித் திரிந்து உன்னைச் சரணடைந்ததைக் கண்டு கொள்வாயாக!

மாதவிப்பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் - வேத உபநிடத ஞானத்தன்மையுடன் யோகிகளும் முனிவர்களும் உன் மணாளனின் திருநாமங்களைப் பாடுகின்றதை காண்பாயாக!

பந்தார்விரலி! உன் மைத்துனன் பேர் பாட - எங்கள் மாயையை அகற்றி, பரமனது சேவைக்கு ஆட்படுத்த

செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப - இனிமையான மங்கள முழக்கம் ஒலிக்க

வந்து திறவாய் - பரந்தாமனிடம் (அவன் அருளுக்கு உகந்தவராக) பரிந்துரை செய்ய வேண்டி நிற்கிறோம்!
*****************


உடையவர் சம்பந்தம்:

ராமானுஜருக்கு (உடையவர் / எம்பெருமானார்) கோதா உபநிடதம் என்று போற்றப்படும் திருப்பாவையின் மீது மிக்க ஈடுபாடு இருந்தது. எம்பெருமானாருக்கு கோதக்ராஜர் (ஆண்டாளுக்கு தமையன் என்ற முறையில்) என்று ஒரு திருநாமமுண்டு.

ராமானுஜரின் திருப்பாவை ஈடுபாடும், அவர் அடிக்கடி திருப்பாவைப் பாசுரங்களை உச்சரித்த வண்ணம் இருந்ததும், அவருக்கு "திருப்பாவை ஜீயர்" என்ற பட்டத்தை அவரது ஆச்சார்யனான பெரிய நம்பியிடம் பெற்றுத் தந்தது! உடையவரும் தன்னை அவ்வண்ணம் அழைப்பதையே மிகவும் விரும்பினார் :)

பிட்சை பெறச் செல்லும்போது (பாதுகைகள் அணியத் தடையில்லாதபோதும்) ராமானுஜர் பாதுகைகள் அணியாமல் தான் செல்வார். அச்சமயங்களில் அவர் திருப்பாவையை உரக்கச் சொல்லியபடி செல்லும் பழக்கம் இருந்ததால், பாதுகைகள் அணிந்து செல்வதை ஆண்டாளுக்கும், திருப்பாவைக்கும் செய்யும் அவமரியாதையாகவே கருதினார்.
ஒரு சமயம், திருப்பாவையைப் பாடியபடி (திருக்கோட்டியூரில்) பிட்சைக்குச் சென்ற ராமானுஜர், "உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்" பாசுரத்தை பாடிய வண்ணம் தனது குருவான திருக்கோட்டியூர் நம்பி அவர்களின் வீட்டு வாசற்கதவைத் தட்டினார். பிட்சையோடு வந்த பெரிய நம்பியின் மகளான அத்துழாய் கைவளை குலுங்கக் கதவைத் திறக்கவும், ராமானுஜர் "செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்" என்று பாடி முடிக்கவும் சரியாக இருந்தது. அவளைக் கண்ட மாத்திரத்தில், பாசுர வரிகளில் லயித்திருந்த ராமானுஜர், அத்துழாயை நப்பின்னை பிராட்டியாக எண்ணிக் கொண்டு, நெடுஞ்சாண்கிடையாக அவள் கால்களில் விழுந்து சேவித்து, மயங்கி விட்டார்.

அத்துழாய் பயந்து போய், தன் தந்தையான பெரிய நம்பியைக் கூட்டி வர, அவர் மிகச் சரியாக ராமானுஜர் "உந்து மதகளிற்றன்" பாசுரத்தை பாடியபோது தான் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டு அவர் மயங்கியிருக்க வேண்டும் என்பதை கணித்து விட்டார்!!! என்ன இருந்தாலும், ராமானுஜருக்கே குரு அல்லவா பெரிய நம்பி :-)

ஆக, இப்பாசுரம் உடையவருக்கு மிகவும் உகந்தது ஆகும். அதனாலேயே, இப்பாசுரத்தை வைணவக் கோயில்களில் இரண்டு தடவை பாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.


உடையவர் கோதக்ராஜர் ஆன கதை:

ஒரு சமயம் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்லும் வழியில், திருமாலிருஞ்சோலையை ராமானுஜர் நெருங்கியபோது, நாச்சியார் திருமொழியில் வரும் "நாறு நறும்பொழில்" பாசுரத்தை அனுசந்தித்துக் கொண்டு இருந்தார்.

நாறு நறும் பொழில்* மாலிருஞ்சோலை நம்பிக்கு*
நான் நூறு தடாவில் வெண்ணெய்* வாய்நேர்ந்து பராவி வைத்தேன்*
நூறு தடா நிறைந்த* அக்கார வடிசில் சொன்னேன்*
ஏறு திருவுடையான்* இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ


இப்பாசுரத்தில், ஆண்டாள் நூறு பாத்திரங்களில் அக்காரவடிசிலும், நூறு பாத்திரங்களில் வெண்ணெயும், சுந்தரராஜப் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் தன் விருப்பத்தை பாடியிருக்கிறார் இல்லையா ? தனது வேண்டுதலை ஆண்டாள் நிறைவேற்றினாளோ இல்லையோ என்ற ஐயத்தின் பேரில், ராமானுஜர், நாச்சியாரின் வேண்டுதலை தான் நிறைவேற்ற நினைத்து, அதை செய்து முடித்தார். தன் பயணத்தைத் தொடர்ந்து, வில்லிபுத்தூர் வந்தடைந்த ராமானுஜருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

ஆண்டாளது கோயிலின் அர்த்த மண்டபத்தில் ராமானுஜர் நுழைந்தபோது, அங்கே அவருக்காகக் காத்திருந்த ஆண்டாளே அவரை வரவேற்று தனது வேண்டுதலை நிறைவேற்றியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தாள். அவரை 'அம்மான்' என்று அன்போடு அழைத்தாள் ஆண்டாள்.

அதாவது, ஒரு பொறுப்புள்ள தமையன் எப்படி தனது தங்கையின் விருப்பத்தை பூர்த்தி செய்வானோ,அப்படி "சில நூற்றாண்டுகளுக்கு முன் ஆன" தனது விருப்பத்தை நிறைவேற்றிய "அண்ணனான" ராமானுஜருக்காக கர்ப்பகிருகத்திலிருந்து வெளியே வந்த கோதை நாச்சியார் அதன் பிறகு உள்ளே செல்லவே இல்லை! அன்றிலிருந்து அர்த்த மண்டபத்திலேயே, தனது மணாளன் வடபத்ரசாயியுடன் சூடிக் கொடுத்த சுடர்கொடி எழுந்தருளி இருக்கிறாள்!!!
அன்றிலிருந்து ராமானுஜருக்கும் கோதக்ராஜர் என்ற திருநாமம் வழங்கலாயிற்று.

ராமானுஜர் திருப்பாவை குறித்த உபன்யாசங்கள் செய்ததோ, விளக்கங்கள் எழுதியதோ கிடையாது. ஆண்டாள் மீது உடையவருக்கு இருந்த பிரியமும், பெருமதிப்புமே அதற்குக் காரணம்! கோதை நாச்சியாரின் அருளிச்செயலுக்கு விளக்கம் சொல்லும் அளவுக்கு தனக்குத் தூய்மையும், தகுதியும் போதாது என்று ராமானுஜர் நினைத்தார். உடையவர் எப்பேர்ப்பட்ட மகானுபாவர் என்று புரிகிறதல்லவா ?
எ.அ.பாலா

6 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

டெஸ்ட்.....

ரவி said...

///டெஸ்ட்.....//

டெஸ்ட்டட். ஒர்க்கிங்.

500 க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

இதுல வர படம் எல்லாம் வரைஞ்சமாதிரி இருக்கே ? நெட்ல கிடைக்குதா இல்ல ஸ்கேன் பண்ணி போடுறீங்களா

dondu(#11168674346665545885) said...

நான் ஆவலுடன் எதிர்ப்பார்த்த திருப்பாவை பாடல் இது. எனக்கு பிடித்த இப்பாடலை முதன் முறையாக சமீபத்தில் அறுபதுகளில் ரா. கணபதி கல்கியில் எழுதியிருந்ததை படித்தபோதே அப்பாடல் என் மனதில் நின்று விட்டது. பல ஆண்டுகள் கழித்து தேசிகன் அவர்கள் தனது பதிவில் எழுதியதையும் படித்தேன்.

திருப்பாவையை பாடியபடி திருக்கோட்டியூரில் பிட்சைக்குச் சென்ற ராமானுஜர், "உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்" பாசுரத்தை பாடிய வண்ணம் நடந்தபோது தான் திருக்கோட்டியூரில் இருப்பதை மறந்து, திருவில்லிபுத்தூரிலேயே இருப்பதாக என்ணிக் கொண்டாராம். தன்னையும் திருப்பாவை பாடும் ஆண்டாளின் தோழிகளில் ஒருவராகவே எண்ணிவிட்டாராம் என்று ரா. கணபதி அவர்கள் எழுதியிருந்தார்.

இப்பாடலை நீங்கள் எப்படிக் கையாளப் போகிறீர்கள் என ஆவலுடன் எதிர்பார்த்தேன். என்னை நீங்கள் ஏமாற்றவில்லை. இதுவரை யோசிக்காத கோணங்களில் எல்லாம் இதை வர்ணித்து விட்டீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

உயிரோடை said...

//நப்பின்னை பிராட்டி மனம் குளிர்ந்து போவாள் தானே :) அதன் வாயிலாக, கண்ணனை எளிதில் அடைய முடியும் என்பது கோபியரின் நம்பிக்கை!//
ஸ்ரீரங்கத்தில் கூட தாயாரை முதலில் சேவித்து விட்டு ரங்கனை பின் சேவிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

//ஐம்புலன்களில் "தொடுதல்" என்பது மேலே சொல்லப்பட்டது. அது போல, மற்ற நான்கு புலன்களின் அனுபவமும் சொல்லப்பட்டுள்ளது சிறப்பு!

கந்தம் கமழும் குழலி - மூக்கு
உன் மைத்துனன் பேர் பாட - நாக்கு
சீரார் வளையொலிப்ப - செவி
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ - கண்//
அருமையான விளக்கம் அண்ணா (கோதை உடையவரை அண்ணா என்றழைக்கும் போது எ.அ.பாலாவை நான் அண்ணா என்றழைப்பதில் தவறன்ன இருக்க முடியும்)

பாசுர சிறப்பாகவும், உடையவர் சம்பந்தமாகவும் சொல்லபட்ட விசயங்கள் அனைத்தும் அருமை அருமை.

நன்றிகள் கோடி.

enRenRum-anbudan.BALA said...

செ.ரவி,
வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

படங்கள் நெட்டில் இருந்து தான்.

பிளாக் & ஒயிட் படங்கள் தேசிகனிடமிருந்து.

ராகவன் சார்,
கருத்துக்கு நன்றி.

மின்னல்,
தினம் வந்து திருப்பாவை சேவிப்பதற்கு நன்றி. உங்களைப் போன்றவர் தான் எழுதுவதற்கு உந்துதல்!

குமரன் (Kumaran) said...

எல்லா கோணங்களிலும் பொருள் எழுதியிருக்கிறீர்கள் பாலா.

தான் பொருள் எழுதினால் தனக்குப் பின்னால் வருபவர்கள் அப்பொருளையே முடிந்த முடிவான பொருள் என்று எடுத்துக் கொண்டு மற்ற கோணங்களில் பொருள் சொல்லி அனுபவிப்பதை நிறுத்திவிடுவர் என்று எண்ணித் தான் உடையவர் பொருள் சொல்லவில்லையோ என்னவோ?!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails